எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த ஆலோசனை; த.மா.க, தமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில்,  அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (23.03.2026) நடைபெற்றது. அதில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள், அ.ம.மு.க.விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரும் சட்டமன்றத் தேர்தலில், 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க, 3இல் இருந்து 4 தொகுதிகள் வரை கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால்,  இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 1 தொகுதியிலும் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாறன் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்கும், எந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று (24-03-26) முகாமிட்டு ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள், ஜான் பாண்டியனுக்கு 1 பொதுத் தொகுதி, ஒதுக்கப்பட்டுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமாக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜான் பாண்டியன், “நீண்ட நாட்கள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் குறித்து தேவேந்திர குல வேளாளர் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 1 பொதுத் தொகுதியை மனநிறைவோடு ராஜபாளையம் தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. மட்டமற்ற மகிழ்ச்சி. சின்னம் குறித்து விரைவில் சொல்வோம்” என்று கூறினார். 

Source link