எடை குறைந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெட்டக திட்டம் துவக்கம்

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில், 52,000 குழந்தைகள் எடை குறைவாக பிறந்து, கண்காணிப்பில் இருக்கும் நிலையில், அக்குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம் மற்றும் ‘தாய்மை செயலி’ ஆகியவற்றை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து அளித்த பேட்டி:

தமிழகத்தில், ஆண்டுதோறும் 8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில், 4.5 லட்சம் குழந்தைகள், அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றன. இவர்களில், 20 சதவீதம் குழந்தைகள், 2 கிலோவுக்கு கீழ் எடை குறைவாக பிறக்கின்றன. தற்போது, 52,000 குழந்தைகள் எடை குறைவான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடர் கவனிப்பிற்கும், இரும்புச்சத்து சொட்டு மருந்து, விட்டமின் பி3 மற்றும் மல்டி விட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. இதற்கு, 8.07 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

பிறந்த குழந்தை பராமரிப்புக்கான அறிவுறுத்தல் அடங்கிய கையேடு வழங்கப்படுகிறது. அதேபோல், தாய்மை செயலி துவக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணியர் பதிவு செய்தல், பேறுகால பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, குழந்தை வளர்ச்சி, தடுப்பூசி போன்றவற்றை இச்செயலி வாயிலாக கண்காணிக்க முடியும்.

இந்த ஆட்சி அமைந்த பின், தாய், சேய் மரண இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக, பூஜ்ஜிய நிலை எட்டப்படும்.இவ்வாறு கூறினார்.

Source link