எண்ணெய் கப்பலுக்கு அனுமதி; ஈரான் புதிய நிபந்தனை

டெஹ்ரான்: சீன யுவான் கரன்சியில் வர்த்தகம் செய்யும் கப்பல்களுக்கு மட்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி வழங்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆசிய நாடான ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அனுமதியின்றி செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது.

உலக எரிசக்தி வினியோகத்தில் 20 சதவீதம் இந்த கடல் பாதை வழியாக நடக்கிறது. தற்போது இது முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோக தொடரிலும் பாதிப்பு ஏற்படும் என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் தங்கள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என நேற்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஈரான் அரசு அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்த எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரில் இருக்கக் கூடாது. சீன யுவான் பணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link