ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த, ‘அஜிஸ்டா ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், தங்களின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம், விண்வெளியில் உள்ள பிற பொருட்களை துல்லியமாக படம் பிடிக்கும் திறனை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
நம் நாட்டின் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ உதவியுடன் ஏவி வருகின்றன.
குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த, ‘அஜிஸ்டா ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், 80 கிலோ எடை கொண்ட, ‘ஏ.எப்.ஆர்’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் சுற்றி வரும் ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சமீபத்தில் துல்லியமாக படம் பிடித்தது.
அதிவேகமாக நகரும் ஐ.எஸ்.எஸ்., துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, 15 தனித்தனி படங்களாக பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 300 கி.மீ., மற்றும் 245 கி.மீ., துாரங்களில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, ‘நான்- எர்த் இமேஜிங்’ எனப்படும் பூமியல்லாத பொருட்களை படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தில், இந்திய தனியார் துறையின் முதல் வெற்றிகரமான முயற்சி எனக் கருதப்படுகிறது. முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அஜிஸ்டா தெரிவித்துள்ளது.
தற்போது நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு போட்டியில், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியமாகிறது. ஏற்கனவே இஸ்ரோ இந்தத் துறையில் சில சோதனைகளை நடத்தியுள்ளது. முதன் முறையாக நம் நாட்டு தனியார் நிறுவனமும் இதில் சாதித்துள்ளது.
