“எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது”

தமிழ்நாடு, கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக இன்று (09.04.2026) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார். 

அதே போன்று மலையாள மொழியில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளாவின் ஜனநாயக உணர்விற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அஸ்ஸாமி மொழியில் வெளியிட்டுள்ள பதிவில், “2026ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அசாம் மக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையைப் பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்தத் தேர்தலை ஜனநாயகம் மற்றும் குடிமைப் பொறுப்பின் கொண்டாட்டமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link