பட மூலாதாரம், ANI
பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்குச் செல்கின்றனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “தற்போது ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அமைதியான முறையில் காந்தி சமாதிக்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவர்களை நினைவுகூரப் போகிறோம். அதேபோல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி அமைதியாக போராடியதற்காக தாக்கப்பட்டு காயமடைந்த மாணவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். இந்திய மாணவர்கள் தனியாக இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கோரிக்கைகளுக்கு முழு எதிர்க்கட்சியும் ஆதரவாக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லம் முன்பாக காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு வந்தனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அங்கு வந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி தேநீர் அருந்த வருமாறு அழைத்தார். அதற்காகத்தான் வந்துள்ளேன்,” என்று கூறினார்.
பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரியும் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு வந்தார். “இந்த விவகாரத்தில் முழு ‘இந்தியா’ கூட்டணியும் ஒன்றாக போராடுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி “அவர் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள். அவரைச் சந்திக்கவே வந்துள்ளோம். ஆனால் அரசு இந்தப் பகுதி முழுவதையும் கோட்டையாக மாற்றியுள்ளது. அரசின் பதற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்துள்ளோம். ஆனால் இங்கே அரசின் அச்சத்தைப் பார்க்க முடிகிறது,” என்றார்.
இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு விடுத்துள்ள வேண்டுகோள்களும் அளித்துள்ள உறுதிமொழிகளும் இளைஞர்களிடம் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

