தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06.04.2026 அன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இன்று காலை சாலையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுடன் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எத்தனை பேர் வந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெல்ல முடியாது. தலைமைச் செயலாளரை மாற்றட்டும் என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கிற அதிமுக டெல்லியில் கட்சியை அடமானம் வைத்து விட்டது அடிமையாகி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தோல்வியின் உச்சத்துக்குப் போய்விட்டார். அதனால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல். இந்த பகுதியில் உள்ள மக்கள் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக வந்துவிடும் போல இருக்கிறது” என்றார்.
