எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் விஜய்; சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

திருவண்ணாமலை: எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தவெக தலைவர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

அவரது பேட்டி;

போன வாரம் முழுக்க அவர் (நடிகர் விஜய்) காங்கிரசுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஏராளமான செய்திகள் வெளி வந்தன. அதன் அடிப்படையில் அவர் பல்வேறு உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களை எல்லாம் சந்தித்தார் என்றும் செய்திகள் வெளி வந்தன.

காங்கிரஸ், தவெக கூட்டணி அமையும் என்றும் பேசப்பட்டது. திடீரென்று இந்த வாரம் பார்த்தோம் என்றால் அவர் பாஜ, அதிமுகவுடன் பேசிக் கொண்டு இருக்கிறார், குறிப்பாக பாஜ அகில இந்திய தலைவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறார் என்று கடந்த 4 நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.

ஆகவே, ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலைமையில் அவர் எந்த பக்கம் செல்வது என்றே புரியாமல் ஒரு குழப்ப நிலையில் இருக்கிறார் என்பதை தான் இது வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் பாஜவை பொறுத்த வரை, தனது அரசியல் சுயலாபத்திற்காக பல்வேறு கட்சிகளை விழுங்குவது என்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. பல மாநிலங்களில் இது நடைபெற்று இருக்கிறது.

இப்படிப்பட்ட கட்சிகளை தாங்கள் சொல்படி ஆடும் பொம்மையாக வைத்துக் கொள்வது, இல்லை என்றால் அந்த கட்சியையே இல்லாமல் செய்வது தான் பாஜவின் வாடிக்கை. அப்படிப்பட்ட வலையில் விஜய் சிக்கி இருக்கிறார். வலையில் சிக்கி அவர்கள் வாயில் விழப்போகிறாரா அல்லது வலையில் இருந்து தப்பித்து வெளியே வர போகிறாரா என்பது அடுத்த ஒருசில நாட்களில் தெரியும்.

கிடைத்திருக்கிற செய்திகள் என்பது, பாஜ அவரை தங்களின் அணியில் சேர்ப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த நிர்பந்தத்திற்கு இவர் அடிபணிந்து செல்வார் என்ற நிலைமை தான் இன்றைக்கு இருக்கிறது. இல்லை என்றால் வேறு விதமான நிர்பந்தத்தை விஜய்க்கு பாஜ கொடுக்கும்.

அதை எதிர்த்து நிற்பதற்கான தைரியமிக்க தலைவராக விஜய் இப்போது இல்லை என்பது தான் தற்போது இருக்கும் நிலைமை. எப்படி இருந்தாலும் அடுத்த வாரத்திற்குள் நிலைமைகள் தெளிவாகும்.

பாஜ கூட்டணியில் விஜய் இணைந்தால் அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். மேலும் அதிகமான ஒட்டு வித்தியாசத்தில், தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு பெ. சண்முகம் பேட்டியளித்தார்.

Source link