தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக என எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து தொகுதி பங்கீடு வரை சென்றுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தல் தொடர்பாக தொழிலதிபரும் நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன், திமுக-விற்கு ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதே போல் தனிக்கட்சி தொடர்பாக விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு பட நிகழ்ச்சியில் தனிக்கட்சி தொடர்பாக பேசியுள்ளார். “எனக்கு போட்டி நடிகர் விஜய்தான். அவர் டிவிகே(TVK) நான் ஏவிகே(AVK). ரெண்டே கட்சிக்கும்தான் போட்டியே. ஏவிகே என்றால் அண்ணா வளர்ச்சி கழகம். அதை விரைவில் நான் ஆரம்பிக்கிறேன்.
இந்த தேர்தல் இல்லையென்றாலும் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக நிற்பேன். இந்த தேர்தலில் என்னுடைய ஆதரவு திமுக தான். அவர் தான் அடுத்த முதல்வராக வருவார்” என்றார். தொழிலதிபர், நடிகர் என்பதை தாண்டி அரசியலில் இவர் ஈடுபட்டுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
