“எனக்கு வாக்களியுங்கள்…’ – கண்ணீர் விட்டு அழுது வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் – சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (06-04-26) ஒரு நாள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளா நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும், வித்தியாசமான முறையிலும் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு வாக்களித்து வெற்றி செய்ய வேண்டும் என அதிமுக நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுது வாக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏவும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.பலராமன் இந்த முறை அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பொன்னேரி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரித்து வரும் நிலையில், அங்கு அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்ட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் பி.பலராமன், “மக்கள் மனதில் என்றைக்கும் குடி கொண்டிருக்கிற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நாம் மலர வைக்க வேண்டும். உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து இந்த எளிய தொண்டனான என்னை வெற்றியடையச் செய்ய ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எனக்கான உடன் இருந்திருக்கிறீர்கள்” என்று கூறும்போதே அவர் கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீரை கட்டுப்படுத்தி பேசிய அவர், “நீங்கள் அனைவரும் எனக்காக உடன் இருக்கிறீர்கள். அதற்காக நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். நீங்கள் அனைவரும் எந்த நேரத்திலும்எந்த காரியம் வந்தாலும் நான் அதை கண்டிப்பாக செய்து தருவேன் என்ற உத்தரவாதத்தை கொடுக்கிறேன்” என்று கூறும் போதே மீண்டும் கண்ணீர் விட்டு அழுதார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல்படுத்தினார்கள். 

Source link