தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மரணத்திற்கு முன்பாக அருணாச்சலம் பேசியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனங்கள் தெரிவித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
தவெக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அக்கட்சியின் தலைவராக விஜய், காவல் மரணங்கள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்காக விமர்சித்து பேசினார். சாரி வேண்டாம் சிஎம் சார். நீதி வேண்டும். இந்த காவல் மரணங்களுக்கு முடிவு கட்டவில்லை என்றால் தமிழக வெற்றி கழகம் சார்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தவெக ஆட்சியிலும் காவல் மரணங்கள் தொடரும் நிலையில், முதல்வர் விஜய் அமைதி காப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சமீபத்தில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்ற காவலில் இருந்த சமயத்தில், சிறையிலே அவர் உயிரிழந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவரை மரணத்திற்கு எதிராக உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த சம்பவத்தின் காயம் ஆறுவதற்கு முன்பே கடந்த சில தினங்களுக்கு முன்பாக விசாரணை கைதியான அருணாச்சலம் உயிரிழந்தார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், போலீசார் தாக்கியதாலே உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தை சார்ந்தவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதோடு இறப்பதற்கு முன்பாக காவலர்கள் தாக்கியதாக அருணாச்சலம் பேசியுள்ளதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காவல் மரணங்கள் சம்பந்தமாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில், தொடரும் காவல் மரணங்கள். முதலவர் வாயை திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் என்னைப் பார்த்து “Sorry சொன்னால் போதுமா?” வீராவேசமாக கேட்டார்.
முதலமைச்சர் ஆனதும் அதனை கூட செய்ய துணிவு இல்லாமல் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என கேள்விகளை முன்வைத்துள்ளார் மு.க. ஸ்டாலின். அதோடு முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் – Accountability, Apology இருக்கிறதா? உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனம் இறங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி இவ்விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது மு.க. ஸ்டாலினும் தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் என வெளியிட்டுள்ள பதிவு மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
