விஜய் எங்கு சென்றாலும் அழைப்பதால், தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல், முன்னணி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய், சென்னை பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்து, விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பிரசாரம் செய்யும் விஜய், அடுத்தபடியாக, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், முன்னணி நிர்வாகிகள் கட்டாயம் வர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு, அவர் புதியவர் என்பதால் தீவிர பிரசாரம் செய் ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் வெற்றி பெற, தெருத்தெருவாக பிரசாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக,கோபிசெட்டிபாளையத் திற்கு செங்கோட்டையன் புதியவரல்ல என்றாலும், அவரை தோற்கடிக்க அ.தி.மு.க., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. எனவே, விஜயை தவிர முன்னணி நிர்வாகிகள் அனைவரும், தொகுதிக்குள் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
ஆனால், தனது பிரசாரத்துக்கு அனுமதி வாங்குவதில் இருந்து, பிரசாரம் செய்யும் வரை, முன்னணி நிர்வாகிகள் கட்டாயம் தன்னுடன் இருக்க வேண்டும் என, விஜய் கட்டளையிடுகிறார்.
அவர்கள் உடன் இருந்தால்தான், பிரச்னை வந்தால் சமாளிக்க முடியும் என்றும், பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உணர்கிறார். அவரின் பேச்சை நிர்வாகிகளால் தட்ட முடியவில்லை. தர்மசங்கடத்தில் அவருடன் சென்று வருகின்றனர்.
முன்னணி நிர்வாகிகளுக்கு இந்த பிரச்னை என்றால், அடுத்தகட்ட வேட்பாளர்களும் அச்சத்திலேயே உள்ளனர். அதாவது, த.வெ.க., வேட்பாளர்கள் பலருக்கும், தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.
விஜய் முகத்தை வைத்துதான், ஓட்டு வாங்க வேண்டும். அதனால்தான், ‘நான் வேறு இல்லை; வேட்பாளர்கள் வேறு இல்லை’ என விஜய் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், கொளத்துாரில் பிரசாரம் செய்த விஜய், வேட்பாளர் பெயரையே தவறாக சொல்லி விட்டார். மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்த விஜய், அம்மாவட்டத்தில் உள்ள இதர தொகுதி வேட்பாளர்களின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
போதாக்குறைக்கு, 106 வேட்பாளர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு த.வெ.க.,வினர் தேர்தல் பணிகளை செய்ய மறுக்கின்றனர். அவர்களை சமாதானம் செய்யக்கூட, கட்சி உயர்மட்டத்தில் ஆள் இல்லை.
மேலும், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடருவதால், பல மாவட்டங்களுக்கு அவர் செல்வதே கேள்விக்குறியாகி உள்ளது. விஜய் பிரசாரம் செய்ய வரவில்லை என்றால், ‘அவுட்’ ஆகி விடுவோம் என்ற பீதியில் தான் பல வேட்பாளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
