என் திரையுலக பயணம், எப்படி ஒரு சிறு கிராமத்தின் புழுதி சாலைகளில் இருந்து, சாமானிய மனிதனாக தொடங்கியதோ, அதுபோல

என் திரையுலக பயணம், எப்படி ஒரு சிறு கிராமத்தின் புழுதி சாலைகளில் இருந்து, சாமானிய மனிதனாக தொடங்கியதோ, அதுபோல தான் என் வாசிப்புப் பழக்கமும் வேரூன்றியது. கிராமத்து தேநீர் கடைகளில், அதிகாலை பனியோடு சேர்ந்து, விடியலின் முதல் வரவாக துளிர்க்கும் ‘தினமலர்’ நாளிதழில் தான், இந்த உலகத்தின் சாளரத்தை நான் முதன் முதலில் திறக்கக் கற்றுக் கொண்டேன்.

பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படியான எளிய நடையும், எவ்வித சாயமுமற்ற நிதர்சனமான உண்மைகளையும் தாங்கி வரும் அதன் பக்கங்கள், அன்று முதல் இன்று வரை என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவை.

ஒரு நாவலாசிரியர், தன் எழுத்துக்களில், எப்படி சமூகத்தின் ஆழமான உணர்வுகளையும், விளிம்பு நிலை மக்களின் யதார்த்தங்களையும் துல்லியமாக பதிவு செய்கிறாரோ, அதே அறத்தோடு தான் தினமலர் நாளிதழும் ஒவ்வொரு நாளும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது.

அதிகாரத்துக்கும், ஆரவாரத்துக்கும் அஞ்சாமல், எந்தவித சமரசமுமின்றி, செய்திகளை உள்ளது உள்ளபடியே மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதன் துணிச்சல் தான், பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தினமலருக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்து கொடுத்திருக்கிறது.

திரையுலகம் சார்ந்த செய்திகளை பொறுத்தவரையில், வெறும் கவர்ச்சியாகவோ, பரபரப்பான பேசு பொருளாகவோ மட்டும் கலையை சுருக்கி விடாமல், மண்ணின் மணத்தோடு உருவாகும் நல்ல படைப்புகளையும், உழைக்கும் கலைஞர்களின் வியர்வைக்கும் உரிய அங்கீகாரத்தை தினமலர் தொடர்ந்து வழங்கி வருவது, மிகவும் பாராட்டுக்கு உரியதாகும்.

ஒரு நடிகனாக மட்டுமின்றி, சமூகத்தை நேசிக்கும் ஒரு சாமானியனாகவும், தினமலரின் இந்த சீரிய பயணத்தை நான் எப்போதுமே வியந்து பார்க்கிறேன்.

காலங்கள் மாறலாம், தொழில்நுட்பங்கள் புதுப்புது பரிமாணங்களை எட்டலாம். ஆனால், அறம் சார்ந்த ஊடகவியலில் தினமலர் பதித்து வரும் முத்திரைகள் காலத்தால் அழியாதவை. இந்த நீண்ட நெடிய பயணத்தில், மேலும் பல வரலாற்று சிறப்பு மிக்க மைல்கற்களை கடந்து, விளிம்புநிலை மக்களின் குரலாகவும், உண்மையின் உரைகல்லாகவும், மக்களின் மனங்களில் தினமலர் என்றும் வீறுநடை போட வேண்டும் என, பெருமிதத்தோடு வாழ்த்துக்கிறேன்!

அன்புடன்,

சூரி

திரைப்பட நடிகர்

Source link