'என் பெயரை தமிழக பா.ஜ., பரிந்துரைக்கவே இல்லை': அண்ணாமலை

சென்னை: ”இந்த சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதே என் இலக்கு,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

‘இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை’ என, கட்சித் தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து விட்டேன். அதோடு, கட்சியின் முக்கிய உயர் மட்ட தலைவர்கள் அனைவரிடமும், ‘நான் போட்டியிடவில்லை’ என்பதை கூறி விட்டேன்.

கட்சித் தலைமை என்னை பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம் என மற்ற மாநிலங்களிலும், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன்.

தி.மு.க.,வின் தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்கு வலிமையாக நான் பேச வேண்டும். அதை என் பொறுப்பாகவே பார்க்கிறேன்.

எல்லா நேரத்திலும் எல்லா சண்டைகளையும் இழுத்துப் போட்டு கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சண்டை தான் போட முடியும். இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதே என் இலக்கு.

இன்னும் காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகின்றன. நிறைய தேர்தல்கள் வரத்தான் போகின்றன. அன்றைக்கு போட்டியிடலாம். என்னிடம் அன்பாக இருக்கும் மக்கள், எப்போதும் அன்பாகத்தான் இருப்பர்.

தேர்தலில் நான் போட்டியிடாமல் இருப்பதற்கு, ஏதேதோ காரணங்களை சொல்கின்றனர். ஆனால், என் பெயர், தமிழக பா.ஜ., தேர்வு குழுவில் இருந்தே, மேல்மட்டத்துக்கு போகாத நிலையில், பா.ஜ., தலைமையால் எனக்கு எப்படி ‘சீட்’ வழங்க முடியும்?

அதேபோல், நான் போட்டியிட விரும்பவில்லை என்பதால், கட்சித் தலைமை, என்னை பிரச்சாரம் செய்ய சொல்லியுள்ளது. அப்படியிருக்க, கட்சி தலைமையை நான் எவ்வாறு குறை கூற முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Source link