எம்எல்ஏ சீட் வாங்கியே தீரணும்; சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் போட்டா போட்டி

-நமது நிருபர்-

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதற்காக, சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அனைவரும், ஆளுக்கொரு பக்கம் முட்டி மோதுகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாக இருந்த கருணாநிதி, மோகன், சங்கர், அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். மா.சுப்பிரமணியன், அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இதனால், தங்களுக்கும் அத்தகைய அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சென்னை மாநகராட்சியின் ஆளும் கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் ஆவலோடு இருக்கின்றனர்.

அதுவும், நிலைக்குழு உறுப்பினர்களாகவும், மண்டலக்குழு உறுப்பினர்களாகவும் இருக்கும் கவுன்சிலர்கள், எப்படியாவது எம்எல்ஏ சீட் வாங்கி விட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். ஆளுக்கு ஒரு பக்கம், செல்வாக்கு மிக்க திமுக புள்ளிகளிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அது மட்டும் போதாது என்று, வேலை செய்ததாக கணக்கு காட்டுவதற்காக, கடைசி நேரத்தில் தங்கள் ஏரியாக்களில் மிச்சம் மீதம் இருந்த பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதனால், கடந்த சில வாரங்களில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கப்பட்டுள்ளன; 45 டெண்டர்களும் அவசரம் அவசரமாக விடப்பட்டுள்ளன. இந்த வேலைகள் எல்லாம் முழு வீச்சில் நடக்கின்றன.

சென்னை மாநகர மேயர் பிரியா, திரு வி நகர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். துணை மேயர் மகேஷ் குமார், வேளச்சேரி அல்லது சைதாப்பேட்டையில் போட்டியிட முயற்சிக்கிறார். கல்விக்கான நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன், சோழிங்கநல்லுார் தொகுதியில் போட்டியிடவும், அடையாறு மண்டல சேர்மன் துரைராஜ் வேளச்சேரியில் போட்டியிடும் வாய்ப்பு கோரியுள்ளனர்.

அக்கவுண்ட்ஸ் கமிட்டி தலைவர் தனசேகரன், விருகம்பாக்கம் தொகுதியிலும், பணிக்குழு தலைவர் சிற்றரசு, ஆயிரம் விளக்கு தொகுதியிலும், திமுக மன்ற குழு தலைவர் ராமலிங்கம் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கோரி மனு கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களும் மீண்டும் தேர்தல் வாய்ப்பு பெறுவதற்காக போட்டியிடுகின்றனர். எம்எல்ஏக்களும், கவுன்சிலர்களும், போட்டா போட்டி போடுவதால், சென்னை மாநகர வார்டுகளில் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகள் வேகம் பெற்றுள்ளன என்கின்றனர், அதிகாரிகள்.

Source link