மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணைப் பாதையை ஈரான் மூடியுள்ளது. இதனால், உலக அளவிலான 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால், பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இன்னும் இந்த நிலை நீடித்தால் பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி நிலையைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் பெறுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தியாவிலும், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98 சதவீத கச்சா எண்ணெய் தேவைக்கு மேற்காசிய நாடுகளை நம்பியுள்ளது. இந்நிலையில், ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போரின் காரணமாகக் கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், அங்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
