சென்னை: விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், கடந்த மாதத்தில் சர்வதேச விமானங்களின் டிக்கெட் விலையை உயர்த்தின.
உள்ளூர் விமானங்களில் படிப்படியாக விலை ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று உள்ளூர் நகரங்கள் இடையிலான விமானங்களில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து, விமான நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்திற்குள் சில வழித்தடங்களில் போதுமான பயணியர் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், டிக்கெட் கட்டண விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரும், விமான நிலையங்களில் ‘போர்டிங் பாஸ்’ வாங்கும் முன், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
