'எலாஸ்டிக்' தயாரிப்பு பாதிப்பு போர் சூழலால் முடங்கும் அபாயம்

திருப்பூர்: ரப்பர் மற்றும் நுால் இறக்குமதி குறைந்து, திடீரென விலை உயர்ந்துள்ளதால், வழக்கமான உற்பத்தி பாதிக்கப்படுவதாக, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்க நாடுகளிடையே போர் சூழல் நீடிப்பதால், கடந்த ஒரு வாரமாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில், கடல்வழி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மலேசியா நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதியாவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்து, ‘ஸ்பேன்டக்ஸ்’ எனும் பாலியஸ்டர் நுால் தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்துதான் எலாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், இவ்வகை நுால் உற்பத்தியும் முடங்கியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில், ரப்பர் விலை, 15 சதவீதமும், பாலியஸ்டர் நுால் விலை 10 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி செலவு மேலும் அதிகரித்து வருவதால், எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விலை உயரக்கூடும் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில், ”எலாஸ்டிக் உற்பத்தியில், 60 சதவீதம் பாலியஸ்டர் நுாலும், 40 சதவீதம் ரப்பரும் பயன்படுத்தப்படுகின்றன. ரப்பர், கிலோவுக்கு 35 ரூபாயும், நுால் 15 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. உற்பத்தியாளர், பழைய விலைக்கு எலாஸ்டிக் உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதே சூழல் தொடர்ந்தால், ‘எலாஸ்டிக்’ விலையை உயர்த்த வேண்டிய நிலை உருவாகும்,” என்றார்.

Source link