எல்-நினோ தாக்கம்: டிசம்பரில் மிஸ்ஸாகுமா மார்கழி குளிர்? பிப்ரவரி 2027க்கு நகரும் சம்மர் சீசன் – will el nino brings heat waves in december to january 2027 of margazhi month

சர்வதேச அளவில் எல்-நினோ தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டு இறுதியில் மார்கழி குளிருக்கு கூட பஞ்சம் வந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

எல்-நினோ என்ன செய்துவிடும் என்று கேட்பவர்களுக்கு எதிர்பாராத டிவிஸ்ட்களுடன் சம்பவங்களை செய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் அடுத்தடுத்து பதிலளித்து வருகின்றனர். மழை அதிகமாக பெய்யும். வெயில் போட்டு தாக்கும். மழையே இல்லாத கோடையில் மழை எட்டி பார்க்கும். பருவமழை காலங்களில் வறட்சியின் விளம்பில் கொண்டு போய் நிறுத்தும். இவ்வாறு அடுத்தடுத்து அச்சுறுத்துகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் காலநிலை மாற்றத்திற்கு தீனி போடுகிறது.

கோடையை முன்னால் நகர்த்தும் எல்-நினோ

இந்நிலையில் Climate Trends வெளியிட்ட சமீபத்திய செய்திக் குறிப்பின் படி, வரும் பிப்ரவரி 2027ல் கோடைக் காலத்தை போல வானிலையை உணரக்கூடும். ஏனெனில் எல்-நினோ மிகவும் வலுப்பெற்று வெப்பநிலையை உயர்த்திவிடும். அப்போது ஹீட் ஸ்டிரெஸ், தண்ணீர் பற்றாக்குறை, பயிர்கள் சேதம் போன்ற பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று சம்பந்தப்பட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோடைக்காலம் என்பது மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும். அது சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே சிரமப்படும் சூழலில், அப்படி ஒரு எச்சரிக்கையை வானிலை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

சென்னையில் மழை எப்போது நிற்கும்? வானிலை மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு

ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை

ஏற்கனவே இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை 13 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய பாதிப்பு என்கின்றனர். இந்த சூழலில் தான் எல்-நினோ தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மார்கழி குளிரும் காணாமல் போய்விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி என மூன்று மாதங்களில் பனிப்பொழிவு காணப்படும். இந்த குளிரானது கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வருவதாக சுட்டிக் காட்டுகின்றனர்.

மார்கழி மாத குளிர் – இனிமே குறைஞ்சிடும்

ஒருவேளை டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பதிலாக வெப்பம் வாட்டி வதைத்தால் பேன், கூலர், ஏசி போட்டு தணிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். வானிலை புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மார்கழி மாத குளிர் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையை எடுத்து கொண்டால் மார்கழி மாத குறைந்தபட்ச வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. வழக்கமாக 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகும். ஆனால் காலநிலை மாற்றத்தால் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது.

தமிழகத்தில் குறையும் வடகிழக்கு பருவமழை

2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் எல்-நினோ பாதிப்புகள் உச்சம் தொடும். இதையொட்டி அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு பதிவாகும். தமிழகத்தை பொறுத்தவரை வடக்கு உட்புற மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Source link