எழுத்தாளர் நிஜந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (31). இவர் ’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்றவர். தொடர் வாசிப்பு மற்றும் எழுத்து என இலக்கிய தளத்தில் செயல்பட்டு வந்த இவர், தனது அடுத்தடுத்த நாவல்களை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே நிஜந்தனின் சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக சுமார் 12 ஆண்டுகளாக தற்கொலை எண்ணத்தை அதிகம் தூண்டும் ‘ஹாலோசினேசன்’ என்ற மனசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனையில் நிஜந்தன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜந்தன்

இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களிடம் பேசிய போது, ‘’ ஹலோசினேசன் என்ற மனசிதைவு தற்கொலை எண்ணத்தை அதிகமாக தூண்டும். அதனால் நிஜந்தனின் காதுக்குள் தற்கொலை செய்துகொள் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். இதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்த நிலையில், அவரது இளவயது வாழ்க்கை பெரும்பாலும் மருத்துவமனைகளிலும், மருந்து வாசங்களுடனும் கழித்தன. பல இடங்களில் மருத்துவ சிகிச்சை எடுத்தும் பயனில்லை.

இந்த மன வாதைகளிலிருந்து தீவிரமான வாசிப்பு மற்றும் எழுத்தின் மூலம் வெளியே வர முடியும் என நம்பியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, படுத்தவரால் மீண்டும் எழ முடியவில்லை. அவருக்கு சுய நினைவு திரும்பாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததால் கிட்னி பாதிக்கப்பட்டதே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றனர். எழுத்தாளர் நிஜந்தனின் இளவயது மரணம் தமிழ் இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பெஸ்ட் சிட்டி, பெரிய குயிலி ரோடு, செட்டிபாளையம் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிஜந்தனின் இறுதிமரியாதை இன்று மாலை 6 மணிக்கு போத்தனூர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

Source link