ஏப்., 10 முதல் 'டோல்கேட்'களில் ரொக்கம் பெறப்படாது: பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ.யில் மட்டுமே கட்டணம் செலுத்தலாம்

புதுடில்லி: நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் ரொக்கம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப். 10ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசிதழ் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இதற்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 முதல் சுங்க சாவடி பரிவர்த்தனைகள் அனைத்தும் பாஸ்டேக், மின்னணு முறைகளில் மட்டுமே நடைபெறும்.

சுங்க சாவடியை கடக்கும் வாகனங்களில் பாஸ்டேக் வசதி இல்லை என்றால், யு.பி.ஐ., பயன்படுத்தி சுங்க கட்டணம் செலுத்தலாம். ஆனால், வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட வாகனம், டிஜிட்டல் வடிவிலும் கட்டணம் செலுத்தாவிட்டால் சுங்கச்சாவடிக்குள் வருவதையோ, வெளியே செல்வதையோ அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கலாம். அப்போது மின்னணு முறையில் அறிவிப்பு ஒன்று வாகன உரிமையாளருக்கு அனுப்பப்படும். மூன்று நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால், சுங்க கட்டணத்தை போல இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

அரசு அலுவலக நிமித்தமான பயணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த கட்டண விலக்கு பெற முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கான பாஸ் பெற்று கொள்ளலாம். அரசு வாகனங்களுக்கு மட்டுமே கட்டண விலக்கு பொருந்தும்.

தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பயணங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. அடையாள அட்டையை பரிசோதித்து அனுமதிக்கும் நடைமுறை இனி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு பாஸ்  அடிக்கடி பயணம் செய்யும் தனியார் வாகனங்கள், ஆண்டுக்கு ரூ.3075 செலுத்தி ஓராண்டு பாஸ் பெறலாம்.  இந்த பாஸை பயன்படுத்தி, அதிகபட்சம் 200 தடவை சுங்க சாவடிகளை கடக்கலாம்.  வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது, தானாகவே சுங்க கட்டணத்தை கழிக்கும் முறை திட்டமிடப்பட்டு வருகிறது.  சுங்கச்சாவடியின் அருகில் வசிப்போர், தினசரி பலமுறை சுங்க சாவடியை பயன்படுத்த உள்ளூர் மாத பாஸ் பெறலாம்.

 நாடு முழுதும் கிட்டத்தட்ட 1,200 சுங்க சாவடிகள் உள்ளன  தினசரி பாஸ்டேக் பரிவர்த்தனைகள் 1.16 கோடி  2025 – -26ல் இவற்றின் சுங்க வசூல் 82,900 கோடி ரூபாய்.

‘வெளிப்படைத்தன்மை வேண்டும்”’ தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறியதாவது: “சுங்க சாவடிகள் ரொக்க பரிவர்த்தனைகளிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவதை வரவேற்கிறோம். ஆனால், சுங்க சாவடிகள் செயல்படுவதில் மேலும் வெளிப்படைத்தன்மை தேவை. தமிழகத்தில் 73 சுங்க சாவடிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, காலாவதியான 32 சுங்கசாவடிகள் அகற்றப்பட வேண்டும். மேலும் யு.பி.ஐ., பயன்படுத்தி பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும்போது சிறிய தொகை பிடித்தம் செய்யப்படுவது ரத்து செய்யப்பட வேண்டும். மேலும், 9 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடி வரும்போது முந்தைய சுங்க கட்டணத்தில் 40 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். ஆனால், முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

Source link