கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு வரும் தேர்தலில் அதே தொகுதியைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம் செந்தில் பாலாஜி. அவரின் வார்த்தையை நம்பி தொகுதியில் பம்பரமாகத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் சிவகாமசுந்தரி.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, தி.மு.க இளைஞரணி நிர்வாகி சி.எஸ்.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏமாற்றம் அடைந்த எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து, ‘நான் என்ன தப்பு பண்ணேன்… இந்த அஞ்சு வருசத்துல எப்படி வேலை பார்த்தேன்னு உங்களுக்கே தெரியும்தானே… எனக்குச் சீட்டு தருவதாக சொல்லிட்டு என்னை ஏன் இப்படி ஏமாத்திட்டீங்க…’ என கேள்வி மேல் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்தில் நெளிந்துவிட்டாராம் செந்தில் பாலாஜி.
”இது நான் எடுத்த முடிவு அல்ல; இளைஞர் அணிக்கு வேண்டும் எனத் தொகுதியை எடுத்துக் கொண்டனர். என்னால், எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்து பார்த்துக்கலாம்…” என ஆறுதல் சொல்லி அனுப்பினாராம் செந்தில் பாலாஜி.
வி.சி.க – தி.மு.க இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸின் நாகை தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டதால், சென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்குவதாகச் சொன்னதாம் தி.மு.க. ராயபுரம் அல்லது ஆர்.கே நகர் தொகுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என முன்வந்திருக்கிறார்கள்.
பல்லாவரம் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறார்கள். எனவே, அவற்றை நிராகரித்துவிட்டு பண்ருட்டி தொகுதியைப் போராடிப் பெற்றாராம் வி.சி.க தலைவர் திருமாவளவன். அதுதான் கட்சிக்குள் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. ‘பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து, கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டார் வேல்முருகன்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான அவரே நிற்கத் தயங்கிய அந்தத் தொகுதியில், ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் திருமா. அதுகுறித்து அமைச்சர் சி.வீ.கணேசனே, ‘இந்தத் தொகுதிக்கு இஸ்லாமிய வேட்பாளர் எப்படி சரிப்பட்டுவரும்… எப்படி ஜெயிக்க வைக்க முடியும்…’ எனக் கொதித்திருக்கிறார். வெற்றி வாய்ப்புள்ள சென்னை தொகுதியைப் பெறாமல், சிக்கலான பண்ருட்டியைக் கேட்டு வாங்கியது ஏன் என்ற புலம்பல் கட்சிக்குள் சத்தமாகவே ஒலிக்கிறது’ என்கிறார்கள் சீனியர் சிறுத்தைகள்.
தூத்துக்குடி தொகுதியில், த.வெ.க வேட்பாளராக விஜய்யின் நண்பரும், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, ‘உனக்கு… எனக்கு…’ என்று அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜூவும் சீட்டுக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இதனால், தூத்துக்குடி த.வெ.க பரபரப்பில் தான் இருந்தது. அந்த பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர, புஸ்ஸி ஆனந்தின் ஆலோசனைப்படி ஸ்ரீநாத் வேட்பாளராக்க அறிவிக்கப்பட்டிருக்கிறாராம். ஏற்கெனவே, தனக்கு மா.செ பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பனையூரில் விஜய்யின் காரை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் அஜிதா.
தற்போது, வருடக்கணக்கில் செலவு செய்து வேலை பார்த்தும் சீட்டு கிடைக்காத விரக்தியில், சுயேச்சையாகப் போட்டியிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம். அவரை சமாதானப்படுத்த முயற்சிகள் தடதடக்கின்றனவாம்.
ராணிப்பேட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.காந்திக்கு வயோதிகம், உடல் நலக்குறைபாடு காரணமாக இம்முறை சீட் கிடைக்காது என்றே பரவலாகப் பேசப்பட்டது. அதைப் போலவே, இம்முறை அவருக்குப் பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமை.
இந்த நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ராணிப்பேட்டை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிரணியில் அ.தி.மு.க போட்டியிடவில்லை என்பது தெரிந்தவுடன், தன் மகனுக்குப் பதிலாக தன்னையே மீண்டும் வேட்பாளராக்கும்படி கட்சித் தலைமையிடம் கேட்டிருக்கிறார் ஆர்.காந்தி.

‘வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இனி எதையும் மாற்ற முடியாது. உங்கள் உடல்நிலைதான் சரியில்லையே… பேசாமல் ஓய்வெடுங்கள்’ என பதில் சொல்லிவிட்டதாம் தலைமை. சமீபத்தில் தந்தை, மகனுக்குள் நடந்த மனக் கசப்பே, ‘வினோத்துக்கு சீட் வேண்டாம். எனக்குக் கொடுங்கள்’ என்று காந்தி மனம் மாறியதற்குக் காரணமாம்.
அதுகுறித்து சீனியர் அமைச்சர் ஒருவரிடம் மனம் திறந்துப் பேசிய காந்தி, தனக்காக சிபாரிசு செய்யும்படி கோரினாராம். அதற்கு, ‘எனக்கு சீட் கொடுத்ததே பெருசு’ என்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் அந்த சீனியர் அமைச்சர்.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் கடும் அப்செட்டில் இருந்தார்.
அதனால், பா.ம.க வேட்பாளர் கே.என்.சேகரன் சந்திக்க நேரம் கேட்டும் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் அலெக்ஸாண்டர். இந்தத் தகவல் கட்சி மேலிடம் வரையில் புகாராகவும், அலெக்ஸாண்டருக்கு மேலிடத்திலிருந்து டோஸ் விழுந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 29-ம் தேதி வேட்பாளர் கே.என்.சேகரன், அலெக்ஸாண்டர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து பேசியிருக்கிறார். பூட்டிய அறைக்குள் இருவரும் அரைமணி நேரத்துக்கு மேல் பேசியும், அலெக்ஸாண்டர் ஒத்துழைப்பு வழங்கும் மனநிலைக்கு வரவில்லையாம்.
அ.தி.மு.க தரப்பிலிருந்து போதிய சப்போர்ட் கிடைக்காதது என்பதை உணர்ந்த பா.ம.க வேட்பாளர் கே.என்.சேகரன், உதறலில் இருக்கிறாராம். இதர கூட்டணிக் கட்சிகளையும் சொந்தக் கட்சியினரையுமே நம்பி தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகிறாராம்.
