ஏமாற்றும் போலி செயலிகளுக்கு 'செக்' 'வெரிபைடு' முத்திரை குத்தும் செபி

பங்குச்சந்தை முதலீடுகள் முன்பை விட இப்போது எளிதாகிவிட்டன. ஆனால், அதே நேரத்தில் போலி செயலிகள் வாயிலாக, முதலீட்டாளர்களை ஏமாற்றுவோரும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வாக, தற்போது ‘வெரிபைடு’ முத்திரை என்கிற புதிய பாதுகாப்பு அம்சத்தை ‘செபி’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி, ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்கு தரகர்களின் செயலிகளுக்கு பக்கத்தில் ஒரு வெரிபைடு முத்திரை இருக்கும்.

இதன் மூலம், முதலீட்டாளர்கள் தாங்கள் பதிவிறக்கம் செய்வது உண்மையான செயலிதானா என்பதை எளிதில் கண்டறியலாம்.

கவனிக்க வேண்டியவை

 முதற்கட்டமாக 600க்கும் மேற்பட்ட பங்கு தரகர் செயலிகளுக்கு இந்த முத்திரை வழங்கப்பட்டுள்ளது

 விரைவில் முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்

 இதுவரை 1.30 லட்சம் தவறான முதலீட்டு தகவல்களையும், 66 போலி வர்த்தக செயலிகளையும் செபி நீக்கியுள்ளது

 கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ‘செபி’ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கடமைக்கான முத்திரை
வெரிபைடு முத்திரையானது செயலியில் ஒட்டப்படும் வெறும் லேபிள் மட்டும் அல்ல. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு சார்ந்தது. சந்தையில் காளான்கள் போல முளைக்கும் போலி செயலிகளில் இருந்து, செபியால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான செயலிகளை முதலீட்டாளர்கள் எளிதில் அடையாளம் காண இந்த முத்திரை நிச்சயம் உதவும். இந்தியாவில் தற்போது 14 கோடிக்கும் அதிகமாகியுள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பது செபியின் கடமை.
– துஹின் காந்த பாண்டே, செபி தலைவர்

புதிய கடன் விதிகள் ஜூலை 15க்கு ஒத்திவைப்பு
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது ஏற்படும் பணத் தேவைகளுக்காக வங்கிகளிடம், ‘இன்ட்ராடே’ கடன் வாங்கும் புதிய விதிகளை அமல்படுத்துவதில் இருந்த காலக்கெடுவை ‘செபி’ தற்போது நீட்டித்துள்ளது.
முதலில் இந்த விதிகள், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, தற்போது இது ஜூலை 15ம் தேதிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source link