ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள்; இறுதியில் நடந்த சோக சம்பவம்!

ஏரியில் மூழ்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ், பார்த்திபன் மற்றும் நித்திஷ் ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள், தேர்வு விடுமுறை என்பதால் சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில் ஒரு சிறுவர் மட்டும் குளித்துக்கொண்டிருக்கும் போது ஆழமான பகுதியை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை கண்ட மற்ற இரண்டு பேர், அந்த சிறுவனை மீட்பதற்காக ஏரியில் குதித்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த இரண்டு பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களும் நீரில் சிக்கிக்கொண்டனர். இதனால், மூன்று பேரும் நீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துர்திஷ்டவசமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் பகுதி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வாசலில் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source link