ஏற்றுமதிக்கு உதவ ரூ.25,060 கோடியில் திட்டம் வர்த்தக அமைச்சகம் அடுத்த வாரம் வெளியிடும்

புதுடில்லி: ஏற்றுமதி மேம்பாட்டுக்கு உதவும் வகையில் 8 அம்சங்களுடன் கூடிய திட்டத்தை அடுத்த வாரம் மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடந்தாண்டு நவம்பரில் மத்திய அமைச்சரவை, 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் இரு திட்டங்களை அறிவித்தது. அதன்படி, ‘ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்துக்கு’ 25,060 கோடி ரூபாயும், ‘கடன் உத்தரவாத திட்டத்துக்கு’ 20,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இ–காமர்ஸ், சேமிப்புக் கிடங்குகள், ‘பேக்டரிங்’ எனும் ஏற்றுமதி பில்களை பணமாக்குதல் உட்பட, 8 அம்சங்கள் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு திட்டங்களை உள்ளடக்கியது. எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த செலவில் நிதி கிடைக்க இது உதவும்.

ஏற்றுமதிக்கு முன்பும், ஏற்றுமதி செய்தபிறகும் வட்டி மானியம் பெறுவது, ஏற்றுமதி பில்களை வங்கி/நிதி நிறுவனங்களிடம் செலுத்தி பணமாக்குவது, இ-காமர்ஸ் வாயிலாக ஏற்றுமதி செய்வோருக்கான கிரெடிட் கார்டுகள், ஏற்றுமதியாளர்களுக்கு பிணை ஆதரவு ஆகியவை முதல் திட்டத்தில் அடங்கும்.

ஏற்றுமதி தரத்தை மேம்படுத்துவது, பரிசோதனை, சான்றிதழ் பெறுதல், தணிக்கை ஆகிய நடைமுறைகள், சர்வதேச பிராண்டிங், பேக்கேஜிங் உதவி, வர்த்தக கண்காட்சிகளில் பங்குபெற உதவுவது, வாங்குவோர் -விற்போர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஏற்றுமதி கிடங்கு மற்றும் சரக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருதல் ஆகியவற்றில் இரண்டாவது திட்டம் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவை தெரிவித்தன.

Source link