புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, 497 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீடு உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
போர் பதற்றத்தால், சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதோடு, காப்பீடு பிரீமியமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீலான சரக்குகள் இந்திய துறைமுகங்களில் தேங்கி கிடக்கின்றன .
இதையடுத்து, இஸ்ரேல், ஈரான், ஈராக், ஏமன் மற்றும் ஆறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் இந்த நாடுகள் வழியாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கும், காப்பீடு உத்தரவாதம் வழங்கும் வகையிலான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
‘ரிலீப்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், போர் காலகட்டத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பொருட்களுக்கும், இனி அனுப்பப்பட உள்ளவற்றுக்கும் காப்பீடு உத்தரவாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.சி.ஜி.சி., நிறுவனத்துக்கு, இதை செயல்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
