– நமது நிருபர் –
அ.தி.மு.க.,வை பா.ஜ., விலைக்கு வாங்கி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துாரில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
‘சூப்பர் ஸ்டார்’ திருவாரூர் என்றால் தி.மு.க., அதனால் தான் இங்கிருந்து பிரசாரத்தை துவக்குகிறேன். திருவாரூர் என்றாலே அழகு; அதைவிட திருவாரூர் தேர் பேரழகு.
திருவாரூர் ஆழித்தேரோட்டம், நேற்று முன்தினம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம்.
தி.மு.க., அரசின் முத்திரை திட்டங்களாக, பொங்கல் பண்டிகை கொண்டாட, 3,000 ரூபாய் கொடுத்தோம். பிப்ரவ ரியில், மகளிர் உரிமைத் தொகையாக, கோடை கால சிறப்பு நிதியுடன் சேர்த்து, 5,000 ரூபாய் வழங்கினோம்.
ஏழைகளின் சுருக்குப்பையில் இருக்கும் காசை கூட, உருவுவதற்கு திட்டம் போடும் பா.ஜ.,விற்கு, மக்களுக்கு நேரடியாக தி.மு.க., அரசு பணம் வழங்குவது எரியத்தான் செய்யும்.
பா.ஜ., தலைமையில் செயல்படும் அ.தி.மு.க., உள்ளிட்ட அடிமை கட்சிகள், தமிழகத்தை கலவர பூமியாக்கி விடலாம் என, ஏராளமான பொய் செய்திகளை பரப்பி பார்த்தனர். அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தி.முக., தேர்தல் அறிக்கைக்கு, ‘சூப்பர் ஸ்டார்’ எனப் பெயரிட்டுள்ளோம். அதில் இடம்பெற்றுள்ளது வாக்குறுதிகள் மட்டுமல்ல; அடுத்து அமையவுள்ள தி.மு.க., அரசு நிறைவேற்ற உள்ள திட்டங்கள்.
பா. ஜ.,வின் கிளை செயலராக செயல்படும் பழனிசாமி, அ.தி.மு.க.,வை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார் .
தி.மு.க., தேர்தல் அறிக்கையை பார்த்து, புலம்ப துவங்கியுள்ளார். அவர் அறிவித்த திட்டங்களை, வரியை உயர்த்தி நிறைவேற்றுதாக கூறுகிறார். பழனிசாமியால் மட்டும் தான் இ ப்படி சிந்திக்க முடியும்.
எதிர்காலம் தி.மு.க.,வை எதிர்க்க பா.ஜ.,விற்கு வலிமை இல்லாததால், அ.தி.மு.க.,வை விலைக்கு வாங்கியுள்ளது. தே.ஜ., கூட்டணியை தமிழகம் புறக்கணித்தால் தான், தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா அல்லது தி.மு .க., சாதனைகளின் தொடர்ச்சியா என்பதை சிந்தித்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் வாகனத்தில்
பறக்கும் படை சோதனை
முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் வாயிலாக, தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்து, அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார். தஞ்சாவூர் அருகே, சாலியமங்கலம் நால்ரோடு பகுதியில், முதல்வர் வாகனம் சென்ற போது, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், முதல்வரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். ஸ்டாலினின் வாகனத்தில் இருந்த பைகள் மற்றும் உடைமைகளை திறந்து பணம், பரிசு பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். முதல்வரின் இருக்கை உள்ளிட்ட பகுதிகளை பெண் போலீஸ் ஒருவர் ஆய்வு செய்தார். இந்த சோதனை சில நிமிடங்கள் நடைபெற்றது. முன் சீட்டில் இருந்த முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
