செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம், பங்குச்சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, நிப்டி ஐ.டி., குறியீடு இந்த வாரத்தில் 8 சதவீதம் சரிந்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்த ஆண்டில் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி.
இன்போசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்.டெக்., போன்ற நிறுவனங்களின் பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன. இது ஒட்டுமொத்த நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் ஒரு சதவீதம் வரை குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
இருப்பினும், நிப்டி ஐ.டி., குறியீடு, நேற்றைய வர்த்தகத்தின் இடையே காணப்பட்ட அதன் குறைந்தபட்ச நிலையில் இருந்து 4 சதவீதத்துக்கும் மேல் மீட்சியடைந்தது.
அமெரிக்க நிறுவனமான ஆந்த்ரோபிக், ‘கிளாடு கோ-ஒர்க்’ என்ற புதிய ஏ.ஐ.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ஆவணங்களை கையாள்வது, அலுவலக பணிகளை தானாகவே மேற்கொள்வது போன்றவற்றை செய்யும் திறன் கொண்டது. இதனால், இந்திய ஐ.டி., நிறுவனங்கள் செய்து வரும் அடிப்படை பணிகளை, இனி ஏ.ஐ., தொழில்நுட்பமே செய்துவிடும் என்பதால், இத்துறைக்கு வருவாய் குறையும் என்ற பயமே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

