ஏ.டி.எம்., மோசடி கும்பல் தலைவன் பிடிபட்டான்

புதுடில்லி: வங்கி ஏ.டி.எம்., மோசடியில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரவிகுமார் பாரதி,36. டில்லி மாநகரின் பல பகுதிகளில் வங்கி ஏ.டி.எம்.,மில் மோசடி செய்த வழக்குகளில் தொடர்புடைய இவரை, தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பக் ஷிம் விஹார் ஏ.டி.எம்.,மில், 35,000 ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக அவ்தார் சிங் என்பவர் அளித்த புகாரையடுத்து, ரவிகுமார் பாரதி 50க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் ரவுஷன் குமார் மற்றும் பிண்டு குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் ரவிகுமார் பாரதி தலைமையில் மோசடி கும்பல் செயல்படுவதும் தெரிய வந்தது.

ஏ.டி.எம்.,க்கு வருபவர்களிடம் குறிப்பாக முதியவர்களை குறிவைத்து இந்தக் கும்பல் மோசடி செய்து வந்துள்ளது.

ஏ.டி.எம்., இயந்திரத்தில் அட்டை நுழைக்கும் துளைக்குள் பசையைத் தடவி, அட்டைகள் உள்ளேயே சிக்கிக் கொள்ளும்படி செய்வர். மேலும், ஏ.டி.எம்., மையத்தில் போலியான வாடிக்கையாளர் சேவை எண் ஒட்டி வைப்பர்.

வங்கி அதிகாரிகள் போல நடித்து, ஏ.டி.எம்.,க்கு வருவோரை ஏமாற்றி அவர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொள்வர். பின், இயந்திரத்தில் சிக்கியுள்ள அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்வர்.

தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சத்தர்பூர் அருகே ராஜ்பூர் குர்த்தில், ரவிகுமார் நேற்று பிடிபட்டார். விசாரணை நடக்கிறது.

Source link