சென்னை: தி.மு.க., மூத்த நிர்வாகியான நேரு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ளார். அவரது துறையில், ‘டெண்டர்’ முறைகேடு மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் என, 2,538 பேரை பணி நியமனம் செய்ததில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஊழலின் சூத்திரதாரிகளாக நேருவின் தம்பிகள், உதவியாளர் செயல்பட்டுள்ளனர். டெண்டர் எடுத்து தரும் புரோக்கர்களாக, சென்னை சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மாநகர போலீசில், கிழக்கு மண்டலத்தில் பணிபுரியும் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் செயல்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய, 258 பக்க ஆதாரங்களுடன், தமிழக சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, கடந்தாண்டு அக்டோபரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூன்று கடிதங்களை அனுப்பினர்.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர்.
அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக வழக்கு பதிவு செய்ய, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு துறையில், முதற்கட்ட விசாரணை, அதன்பின், விரிவான விசாரணை நடத்திய பின்னரே வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதையே காரணமாக கூறி வழக்கு பதிவு செய்யாமல், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
