ஐதராபாத்: சொத்து வரி செலுத்தாத காரணத்தினால், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர்

ஐதராபாத்: சொத்து வரி செலுத்தாத காரணத்தினால், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஐதராபாத்தின் யூசுப்குடா பகுதியில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு கடந்த 2017 ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை. ரூ.82.91 லட்சம் பாக்கி இருந்தது. இது தொடர்பாக அந்த வீட்டுடன் தொடர்படையவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் அனுப்பினர். முதலில் இந்த கட்டடம் தனியார் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. பிறகு வணிக பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.

இதற்கு இடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், இந்த வீட்டை வணிக பயன்பாட்டில் இருந்து குடியிருப்பாக மாற்ற வேண்டும் என முறையிட்டார். அதற்கு மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், அதன் பிறகு எந்த பதிலும் இல்லை. வரி பாக்கியும் செலுத்தப்படவில்லை.இதனையடுத்து அந்த வீட்டிற்கு மாகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மார்ச் 31க்கு பிறகு இந்த வரி பாக்கி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வீட்டை கடந்த 1967 ம் ஆண்டு ரூ.50 ஆயிரத்துக்கு ஜெயலலிதா வாங்கினார். கடந்த 2015ம் ஆண்டு இந்த வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஜெயலலிதா ஓய்வெடுக்க அடிக்கடி ஐதராபாத் செல்வது வழக்கம்.
அந்நகரில் அவருக்கு பல சொத்துகள் உள்ளன. செகந்திராபாத்தில் ஒரு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link