'ஐந்து ஆண்டு பிரயோஜனம் இல்லாத ஆட்சி': அண்ணாமலை காட்டம்

ஊட்டி: ”கடந்த ஐந்து ஆண்டில் தமிழகத்தில் எந்த பிரயோஜனமும் இல்லாத ஒரு ‘பேக்பெஞ்சர்’ ஆட்சியை ‘பொம்மை’ முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்,” என, அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டில் தமிழகத்தில் பிரயோஜனம் இல்லாத ஒரு ‘பேக்பெஞ்சர்’ ஆட்சியை ‘பொம்மை’ முதல்வர் ஸ்டாலின் நடத்தி, சொத்துவரி, மின்சார கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில், 8,008 படுகொலைகள், 2,080 பாலியல் வன்கொடுமைகள், 39,900 போக்சோ வழக்குகள் நடந்துள்ளது. இது போன்ற ஆட்சியை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. தி.மு.க., ஆட்சி, மீண்டும் வந்து விடக்கூடாது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட உயர்த்தாமல், பிரதமர் விலையை கட்டுக்குள் வைத்துள்ளார். எந்த தட்டுபாடு இல்லாமல் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க., தொடர்ந்து அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுடன் தைரியமாக பேசி, ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, மாநில நலனை பாதுகாத்துள்ளார். ஆனால், மாநில நலனை விட்டுக் கொடுத்த கட்சியாக தி.மு.க., உள்ளது.

தி,மு,க.,வுக்கு அடிமைத்தனம் குறித்து பேச அருகதை இல்லை. அடிமைத்தனத்துக்கு இலக்கணமே தி.மு.க., தான்.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் போஜராஜனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால், ஊட்டி மார்க்கெட் பிரச்னை, படுக மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலுக்குள் எச்.ஆர்.என்.சி., புகுந்து விடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படுக சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.டி அந்தஸ்து நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஊட்டி தொகுதி பொறுப்பாளர் பால நந்தகுமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Source link