அ .தி.மு.க.,வில் முதல்வர் பதவி வரை வகித்த பன்னீர்செல்வம், சமீபத்தில், தி.மு.க.,வுக்கு தாவி, தேனி மாவட்டம் போடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். ஏற்கனவே, இதே தொகுதியில் மூன்று முறை அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம், இந்த முறை தி.மு.க.,வில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வினருக்கு பரிசு மழை திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தேர்தல் பணி செய்யும் கிளை செயலர்களுக்கு தலா 10,000 ரூபாய்; பூத் கமிட்டியினருக்கு தலா 5,000 ரூபாய் என ‘கவனிப்பு’ நடக்கிறது. இந்நிலையில், மேல சொக்கநாதபுரம், சங்கராபுரத்தில் நடந்த தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவர் அறிவித்த பரிசு மழையால், தி.மு.க.,வினர் ‘குஷி’யாகி உள்ளனர்.
கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “போடி தொகுதியில் நகர மற்றும் ஒன்றிய ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகளை பெற்றுத்தரும் பூத் கமிட்டி பொறுப்பாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
“அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதல் ஓட்டு பெற்று தந்தால் கூடுதல் பரிசும் தரப்படும். பூத் கமிட்டிகளை ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.,வை விட அதிக ஓட்டுகளை பெற்று தரும் நகர, ஒன்றிய செயலருக்கு ஐந்து சவரன் தங்க பதக்கம் பரிசாக வழங்கப்படும்,” என அறிவித்தார்.
