ஐப்பசி பெளர்ணமி, இறை வழிபாட்டிற்கு மட்டுமின்றி பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் அதிகரிப்பதற்கும், முக்தியை பெறுவதற்குமான மிக சிறப்பான ஆன்மீக சிறப்பமிக்க நாளாகும். இந்த நாளில் கர்மவினைகள், பாவங்கள் நீங்கி, பெருமாளின் திருவடியை அடைவதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என விளக்குகிறார் சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.
ஐப்பசி மாத பெளர்ணமி இந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டு ரேவதி நட்சத்திரத்துடன் இணைந்து ஐப்பசி பெளர்ணமி வருவது மிகவும் விசேஷமானதாகும். துலாம் மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இது அனைவரும் அறிந்தது தான். இருந்தாலும் ரேவதி நட்சத்திரத்தில் வரும் ஐப்பசி மாத பெளர்ணமியில் காவிரியில் நீராடுவது மிக மிக உன்னதமான பலனை தரும்.
ரேவதி நட்சத்திர சிறப்பு :
27 நட்சத்திரங்களில் கடைசியாக 27வது நட்சத்திரமாக வருவது ரேவதி. இது முக்தியை குறிக்கும் நட்சத்திரமாகும். அது மட்டுமல்ல ரேவதி நட்சத்திரம் ரங்கநாதருக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதே போல் காவிரி நதியும் ரங்கநாதருக்கானது. காவிரி கரையில் மொத்தம் ஐந்து ரங்கநாதர் கோவில் கொண்ட தலங்கள் உள்ளன. இவற்றை பஞ்சரங்க தலங்கள் என்பார்கள். காவிரியில் நீராடி ரங்கனை தரிசனம் செய்து, மனமுருகி வழிபடுவதால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அதில் ரங்கநாதருக்குரிய ரேவதி நட்சத்திரம், பெளர்ணமியுடன் இணைந்து வரும் நாளில், துலாம் மாதத்தில் காவிரியில் நீராடி ரங்கனை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
ரேவதி நட்சத்திரம் + ஐப்பசி பெளர்ணமி இணைந்த நாளில் செய்ய வேண்டியவை:
– ரேவதி நட்சத்திரமும் ஐப்பசி மாத பெளர்ணமியும் இணைந்த நாளில், அதிகாலையில் காவிரியில் புனித நீராட வேண்டும்.
– காவிரியில் நீராடிய பிறகு, நன்கு துடைத்து விட்டு, ஈரம் இல்லாத உடையை அணிந்து கொண்டு, நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஈர உடையுடன் கோவிலுக்கு செல்லக் கூடாது.
– முடிந்தால் துளசியால் அல்லது தேங்காய், பழம் கொண்டு ரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். முடியாதவர்கள் மனம் உருகி ரங்கநாதரை வழிபட்டு விட்டு வர வேண்டும். இதனால் பாவங்கள் அனைத்தும் நீங்கி, புண்ணியம் அதிகரிக்கும்.
புண்ணியம் எதற்கு பயன்படும்?
பொதுவாக ஒருவர் இறந்த பிறகு, அவர்களின் ஆன்மாவானது மேல் உலகிற்கு செல்லும் போது வழக்கமாக எமதூதர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் என்பார்கள். ஆனால் அந்த ஆன்மா புண்ணியம் செய்திருந்தால் தேவர்கள், அந்த ஆத்மாவை தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து, அந்த தங்க சிம்மாசனத்தை தங்க தாம்பாலத்தில் வெல்வெட் துணி விரித்து வைத்து, தேவர்கள் தங்கள் தலை மீது வைத்து தாங்கி செல்ல, ரம்பா, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ நடன மங்கைகளுடன் வந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆடிப்பாடி அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் அந்த புண்ணிய ஆத்மாவை ஒரு இடத்தில் வைத்து விடுவார்கள். திருமாமணிமண்டபத்தில் இருக்கக் கூடிய ரங்கநாத பெருமாளும் தாயாரும் வந்து, அந்த ஆன்மாவை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இதையே பெருமாளிடம் ஐக்கியமாவது என்கிறார்கள். இந்த புண்ணிய பலன், நாராயணனின் சன்னிதானத்தில் சேவை செய்கிறவர்களுக்கு கிடைக்கும். நாராயண சேவை செய்ததற்கு இணையான புண்ணியம் இந்த துலாம் மாத ஐப்பசி பெளர்ணமி அன்று வரும் ரேவதி நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் காவிரியில் நீராடினால் கிடைக்கும்.
ஸ்ரீரங்கம் காவிரியில் நீராடுவதன் சிறப்பு :
ஐப்பசி பெளர்ணமியில் காவிரியில் நீராடுவது என பொதுவாக சொல்லாமல், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் காவிரியில் புனித நீராட சொல்வதற்கு இரண்டு சிறப்புமிக்க காரணங்கள் உள்ளன.
1. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், வைணவ மரபில் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதால். காவிரியில் நீராடி, பூலோக வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதரை தரிசனம் செய்தால், வாழ்க்கைக்கு பிறகு மேல் உலகில் இருக்கும் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும்.
2. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்த ஏழு பிரகாரங்களும், ஏழு உலகங்களையும் குறிக்கக் கூடியதாகும். ஏழு உலகை சுற்றி வந்தாலும் இறுதியில் ரங்கநாதரின் திருவடியை சரணடைவதே இந்த பிறவியின் நோக்கமாக கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஏழு பிரகாரங்கள் உள்ளன.
– கட்டுரையை வழங்கியவர்
டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,
சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.
மொபைல் எண்: 9087426655
