ஐப்பசி மாத பெளர்ணமி 2026 திருவண்ணாமலை பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏற்ற நல்ல நேரம் அறிவிப்பு

ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பெளர்ணமிகளில் ஒன்று, ஐப்பசி மாத பெளர்ணமியாகும். இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. சிவபெருமானின் அருளையும், சந்திர பகவானின் அருளையும் பெற்று, ஜாதகத்தில் இருக்கும் சந்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கு மிகவும் ஏற்ற நாளாக ஐப்பசி பெளர்ணமி கருதப்படுகிறது.

ஐப்பசி பெளர்ணமி சிறப்புகள்:

– சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் நாள்.

– சந்திரன் தனது 16 கலைகளுடன் முழுமை பெற்று திகழும் நாள். அதனால் இந்த நாளில் அதிகாலையிலும், மாலையிலும் சந்திர தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

– காசியில் அன்னை அன்னபூரணி அன்னம் இட்டதால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சாபமும், பிரம்மஹத்தி தோஷமும் நீங்கிய நாள்.

– சிவபெருமானுக்கு பால், அரிசி, வஸ்திரம் போன்ற வெள்ளை நிற பொருட்களை படைத்து வழிபடுவதால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்கள் விலகும்.

ஐப்பசி பெளர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?

– வீடுகளில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் அல்லது சிவ மந்திரங்கள் சொல்லி வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும்.

– அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேக தரிசனம் செய்வதால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும்.

– காலையிலும், மாலையிலும் சந்திர தரிசனம் செய்வது நலம்.

– திருவண்ணாமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு சென்று, கிரிவலம் செய்து வழிபடலாம்.

பொதுவாக பெளர்ணமி வழிபாடு என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருவது திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு தான். நினைத்தாலே முக்தியை தரும் திருத்தலமான திருவண்ணாமலையில் பெளர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. ஐப்பசி மாதத்திலும் பெளர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான நல்ல நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐப்பசி பெளர்ணமி 2026 திருவண்ணாமலை கிரிவலம் நாள் நேரம் :

ஐப்பசி பெளர்ணமி 2026 தேதி அக்டோபர் 25 ஞாயிறு பெளர்ணமி திதி துவக்கம் அக்டோபர் 25 காலை 11.31 பெளர்ணமி திதி நிறைவு அக்டோபர் 26 காலை 10.16 கிரிவலம் துவக்க வேண்டிய நேரம் அக்டோபர் 25 காலை 11.25 கிரிவலம் நிறைவு செய்ய வேண்டிய நேரம் அக்டோபர் 26 காலை 10.09

ஐப்பசி பெளர்ணமி திருவண்ணாமலை கிரிவலப் பலன்கள்:

ஐப்பசி மாதத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் வாழ்வில் உயர்ந்த பட்டம், பதவி, புகழ் கிடைக்கும். முற்பிறவி மற்றும் இந்த பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். தெய்வீக அருளும், சித்தர்கள் அருளும் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் செல்வதன் பலன்கள் :

– சிவபெருமானின் அருளும், சவலோக பதவியும் கிடைக்கும்.

– கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

– நோய்கள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

– உத்தியோகம் மற்றும் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். தேவையற்ற பயங்கள் நீங்கும்.

– ஞாயிறும் பெளர்ணமியும் இணையும் நாளில் கிரிவலம் வந்தால் கயிலாயம் சேரும் பாக்கியம் கிடைக்கும்.

ஞாயிறு, ரோவதி நட்சத்திரம், பெளர்ணமி சேர்க்கை :

நட்சத்திரங்களில் 27வது நட்சத்திரமாக வரும் ரேவதி நட்சத்திரம், மோட்சத்தை குறிப்பதாகும். ஞாயிறு, ரேவதி நட்சத்திரம், பெளர்ணமி இணையும் நாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது உயர்ந்த ஞானத்தை அருள்வதுடன், கர்மவினைகளில் இருந்து விடுவித்து, முக்தியை தரும். இந்த நாளில் கிரிவலம் வருவதால் வறுமை, கடன், மரண பயங்கள் ஆகியவை நீங்கி வாழ்க்கை சுபிட்சமடையும் என்பது நம்பிக்கை.

Source link