புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (50 மீ., ‘ரைபிள்-3பி’) உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்-3 பொசிஷன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் குமார் (593.34 புள்ளி), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (588.40), அகில் ஷியோரன் (588.32) ‘டாப்-3’ இடம் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் நீரஜ், ஐஸ்வரி பிரதாப் சிங், அகில் அடங்கிய இந்திய அணி 1769.106 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
தனிநபர் பைனலில் அசத்திய ஐஸ்வரி பிரதாப் சிங், புதிய உலக சாதனையுடன் (362.0 புள்ளி) தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான நீரஜ் (361.8), அகில் (343.5) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஜூனியர் ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்-3 பொசிஷன்ஸ்’ அணிகள் பிரிவில் அட்ரியன் கர்மாகர் (584.26), வேதாந்த் நிதின் வாக்மேர் (580.23), பிரின்ஸ் (577.22) அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. தனிநபர் பிரிவில் அட்ரியன் (353.2) தங்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் மன்வேந்திரா சிங் ஷெகாவத் (338.6) வெண்கலம் வென்றார்.
