நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு மார்ச் மாதத்திற்கான தலைமையை ஏற்றுள்ள அமெரிக்கா தயாரித்துள்ள இந்த மாதத்திற்கான செயல்திட்டத்தை ஏற்க ரஷ்யா, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை மார்ச் மாதத்திற்காக அமெரிக்கா ஏற்றது. வழக்கமாக, அந்த மாதத்தில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய செயல் திட்டம் துவக்கத்திலேயே அங்கீகரிக்கப்படும்.
ஆனால், அமெரிக்கா தயாரித்த செயல் திட்டத்தை ரஷ்யா மற்றும் சீனா எதிர்த்துள்ளன.ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்த, 2006ல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ‘1737 தீர்மான குழு’ என்ற ஒன்றை அமைத்தது. இந்த குழு தொடர்பான விளக்கக் கூட்டம் செயல்திட்டத்தில் இடம்பெற்றிருந்ததே எதிர்ப்புக்கு காரணம்.
இது குறித்து ரஷ்யா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானுக்கு எதிரான தடைகளை மீண்டும் அமல்படுத்தும் விவகாரத்தை, அமெரிக்கா செயல் திட்டத்தில் சேர்த்துள்ளது. இதை சேர்க்க வேண்டாம் என்று முன்னரே தெரிவித்திருந்தோம். ஆனால் அதை அமெரிக்கா கவனிக்காததால், திட்டத்தை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கவுன்சிலின் மார்ச் மாத பணித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா தனியாக தன் மாத திட்டத்தை வெளியிட்டுள்ளது.
