பெங்களூரு: பந்துக்கு பந்து பரபரப்பான ஐ.பி.எல்., தொடர் இன்று ஆரம்பமாகிறது. கோடைக்கு இதமாக பேட்டர்களின் ரன் மழை, சூடான ‘பவுலிங்’, சூப்பரான ‘பீல்டிங்’ என அடுத்த 65 நாளுக்கு அனல் பறக்கும். தோனி, கோலி, ரோகித் சர்மா போன்ற அனுபவ வீரர்களுக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, இஷான் கிஷான் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் சவால் கொடுக்க உள்ளனர். ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன் வரவால், புது தெம்புடன் களமிறங்கும் நம்ம சென்னை அணி, ஆறாவது முறையாக கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டி–20’ தொடரின் 19வது சீசன் இன்று பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது. வரும் மே 31ல் பைனல் நடக்க உள்ளது. சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
சாம்சன் பலம்: சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா, பிரஷாந்த் வீர் இருப்பதால், இளம் படையாக மாறியுள்ளது. ‘டி-20’ உலக கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் அதிரடி துவக்கம் தரலாம். 44 வயதில் தோனி விளையாட இருப்பது கூடுதல் பலம். இவரது ‘கூலான’ அணுகுமுறை, ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் சிக்சர் அடிப்பது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே விளாசலாம். பந்துவீச்சில் கலீல் அஹமது, மாட் ஹென்றி, ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி அசத்தலாம்.
சூர்யா ‘சூறாவளி’: ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணிக்கு அனுபவ ரோகித் சர்மா பலம் சேர்க்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘ஆல்-ரவுண்டராக’ அசத்த வேண்டும். சமீபத்தில் கேப்டனாக இந்தியாவுக்கு ‘டி-20’ உலக கோப்பை வென்று தந்த சூர்யகுமார், திலக் வர்மா, குயின்டன் டி காக், ரிக்கிள்டன், ஷெர்பேன் ரூதர்போர்டு என ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. பந்துவீச்சில் ‘யார்க்கர்’ பும்ரா, பவுல்ட், சான்ட்னர் கைகொடுக்கலாம்.
வைபவ் சம்பவம்: ராஜஸ்தான் அணியில் இருந்து சாம்சன் விலகியது பலவீனம். இவருக்கு பதில் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்கிறார். ஜெய்ஸ்வால், இளம் வைபவ் சூர்யவன்ஷி, ஹெட்மெயர், துருவ் ஜுரல் ரன் குவிக்கலாம். சென்னை அணியில் இருந்து வந்துள்ள ‘ஆல்-ரவுண்டர்கள்’ ரவிந்திர ஜடேஜா, சாம் கர்ரான் கைகொடுக்கலாம். ‘வேகத்துக்கு’ ஆர்ச்சர், ‘சுழலுக்கு’ ரவி பிஷ்னோய் உள்ளனர்.
தமிழக ‘மாடல்’: குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் நல்ல துவக்கம் தரலாம். ‘டி-20’ உலக கோப்பையில் தன்னை புறக்கணித்ததற்கு பதிலடி தர முயற்சிப்பார். சாய் சுதர்சன், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் இருப்பதால், ‘சின்ன தமிழக அணியாக’ காட்சி அளிக்கிறது. ஜோஸ் பட்லர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சிராஜ், ரபாடா, இஷாந்த் சர்மா போன்ற பிரபல வீரர்கள் பலம் சேர்க்கின்றனர்.
வரமாக வருண்: அனுபவ ரகானே தலைமையில் கொல்கட்டா களமிறங்குகிறது. துணை கேப்டன் ரிங்கு சிங், டிம் செய்பர்ட், ஆலன் விளாசலாம். ‘சுழலில்’ வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் அசத்தலாம்.
‘கில்லர்’ மில்லர்: இந்திய ‘டி-20’ அணியின் துணை கேப்டன் அக்சர் படேல், மீண்டும் டில்லி கேப்டனாக களம் காண்கிறார். டேவிட் மில்லர், ராகுல், பிரித்வி ஷா போன்ற அனுபவ பேட்டர்கள் உள்ளனர். பந்துவீச்சில் ஸ்டார்க்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழகத்தின் நடராஜன், நிகிடி, குல்தீப் யாதவ் உள்ளனர்.
மிரட்டும் ‘டிராவிஷேக்’ : ஐதராபாத் அணிக்கு ‘டிராவிஷேக்’ என அழைக்கப்படும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா துவக்கத்தில் மிரட்டலாம். பாட் கம்மின்ஸ் இடம் பெறாததால், தற்காலிக கேப்டனாக இஷான் கிஷான் செயல்படுவார். கிளாசன், லிவிங்ஸ்டன், நிதிஷ் குமார் உள்ளனர். பந்துவீச்சில் உனத்கட், கார்ஸ் கைகொடுக்கலாம்.
சிக்கலில் ரிஷாப்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக தொகைக்கு (ரூ. 27 கோடி) வாங்கப்பட்ட லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், கடந்த முறை சோபிக்கவில்லை. இம்முறை திறமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிரடிக்கு மிட்சல் மார்ஷ், மார்க்ரம், பூரன் உள்ளனர். ‘வேகப்புயல்’ மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டது பலம்.
‘சிங்கம்’ ஷ்ரேயஸ் ஐயர்: பஞ்சாப் அணியின் தரமான கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார். கடந்த முறை பைனலில் தோற்றதற்கு இம்முறை பரிகாரம் தேடலாம். பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், வதேரா, சஹால் போன்ற உள்ளூர் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஸ்டாய்னிஸ், யான்சென், ஓமர்சாய் என நிறைய ‘ஆல்–ரவுண்டர்’கள் உள்ளனர்.
கோலி இலக்கு: பெங்களூரு அணி கடந்த முறை கோப்பை வென்றதன் மூலம், 18 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்தார் விராத் கோலி. இவரது அனுபவம் கைகொடுக்கலாம். கேப்டன் ரஜத் படிதர், பில் சால்ட், டிம் டேவிட், ‘பினிஷர்’ ஜிதேஷ் சர்மா, வெங்கடேஷ் ஐயர், ‘ஆல்-ரவுண்டர்’ குர்ணால் பாண்ட்யா என பலமான அணியாக திகழ்கிறது. பந்துவீச்சில் மிரட்ட புவனேஷ்வர், ஜேக்கப் டபி உள்ளனர்.
ஐ.பி.எல்., போட்டியில் கொஞ்சம் அசந்தாலும் தேறுவது கடினம். இதை உணர்ந்து களத்தில் ஒவ்வொரு நொடியும் கவனமாக செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும்.
ரூ. 46.5 கோடி பரிசு
ஐ.பி.எல்., தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46.5 கோடி. பைனலில் சாதித்து, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்படும்.
முதன் முறை
ஐ.பி.எல்., தொடரின் நடப்பு சீசனில் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் காயத்தால் அவதிப்படுகிறார். இவருக்குப் பதில் இஷான் கிஷான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 19 ஐ.பி.எல்., சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.
