புதுடில்லி: பிரபல ஒடிசி நடனக் கலைஞர் மதுமிதா ராவத், 59, மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
டில்லியை சேர்ந்த பிரபல ஒடிசி நடனக் கலைஞர் மதுமிதா ராவத், சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். டில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, நேற்று காலை 6:22 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் குழு தீவிர முயற்சி செய்தும், மரணம் அடைந்தார்.
ஒடிசி நடனக்கலை குரு மாயாதர் ராவத்தின் மகளான மதுமிதா, ஒடிசி நடனத்தை மேம்படுத்தியதற்காக 1997-ம் ஆண்டின் பாரத் நிர்மாண் விருது, 2010-ம் ஆண்டில் ஒடிசா மாநில குங்குர் சம்மான் விருது, 2011ம் ஆண்டில் ஒடிசா வாழும் ஜாம்பவான் விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றவர்.
இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி, ஆஸ்திரியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரான்ஸ், போர்ச்சுகல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
இறுதிச் சடங்குகளுக்கு பின்,நேற்று மாலை மாலை 3:30 மணிக்கு டில்லி லோதி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதுமிதா மறைவுக்கு முதல்வர் ரேகா குப்தா, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
