சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என்று மதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியிறுத்தி உள்ளனர். மேலும் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் திமுக தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கூடுதல் தொகுதிகளிலும், தனிச்சின்னத்தில் போட்டியிட போவதாகவும் திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ஒதுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கூறி வருகிறது. இதன் காரணமாக, தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத சூழல் காணப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிகள் எண்ணிக்கை போன்ற விவகாரங்களில் திடமான முடிவு எடுக்க, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை, எந்த சின்னத்தில் இம்முறை போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், மதிமுக பதிவு அங்கீகாரம், திமுக ஒதுக்கும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்திலும், மற்ற தொகுதிகளில் உதயசூரியனில் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கட்சியின் பதிவு அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது என்பது குறித்து கட்சியின் தரப்பில் விரைவில் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று மதிமுக நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
