ஒரு கதாபாத்திரத்துக்காக ஒட்டு மொத்த படமா?

நாயகிகள் மார்க்கெட் இழந்த பிறகு போலீஸ் வேடம் கலெக்டர் வேடம் அரசியல்வாதி வேடம் என பழைய ரூட்டை பின்பற்றுவது வழக்கம். தற்போது அதே அரதப்பழசான ரூட்டில் பயணம் செய்து மாவட்ட கலெக்டராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி அபர்ணதி. இந்த படம் அவருக்கு கை கொடுத்ததா, இல்லையா? 

தாய்நாடு என கற்பனை மாவட்டத்தில், காவேரி என்ற நகரில் வாழும் அபர்ணதி மாவட்ட கலெக்டராக இருக்கிறார். அவர் வெளி உலகத்துக்கு நேர்மையாகவும் நியாயமானவராகவும் நடந்து கொண்டு உள்ளுக்குள் பல்வேறு கிரிமினல் வேலைகளை செய்கிறார். இதனால் அவருக்கு எதிரிகள் பெருகுகின்றனர். ஒரு கட்டத்தில் அபர்ணதியை போட்டு தள்ளும் சூழல் ஏற்பட அதிலிருந்து அபர்ணதி தப்பித்தாரா, இல்லையா? இவரின் சமயோஜித புத்தியால் அரசியல் சூழலில் எவ்வித மாற்றங்களை நிகழ்த்தி காட்டினார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.

ஒரு அதிரடியான அரசியல் கதைகளத்தில் பல்வேறு அரசியல் யுக்திகளை பயன்படுத்தி ஒரு த்ரில்லர் படமாக இந்த படத்தை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக். எதிரிகளை பந்தாடும் கதாபாத்திரம் மூலம் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக படத்தை கொடுத்த இயக்குநர் கதையில் ஏனோ கோட்டை விட்டு இருக்கிறார். கதாபாத்திரத்திலும் தெளிவு இல்லை. பல்வேறு கேள்விகளுக்கும் விடையில்லை. அபர்ணதி ஏன் அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும்? அவருக்கான மோட்டிவ் என்ன? ஒரு கலெக்டராக இருந்து கொண்டு இவ்வளவு வேலை செய்ய முடியுமா? போன்ற எந்த கேள்விகளுக்கும் விடை இல்லாமல் நட்ட நடு வானில் படம் தொங்கி நிற்கிறது. படத்தை எடுத்த விதத்திலும் திரைக்கதை அதற்கேற்றார் போல் அமைத்த விதத்திலும் கவனம் செலுத்திய இயக்குநர் கதையிலும் கதாபாத்திரத்திலும் இன்னுமும் கூட தெளிவு கொடுத்திருக்கலாம். 

அபர்ணதி தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் கொடுத்து கவனம் பெற முயற்சி செய்திருக்கிறார். அபர்ணதி நண்பராக வரும் சாய்தன்யா, கூடவே இருந்து கொண்டு பல வேலைகளை செய்கிறார். இவர் அரசியலில் பெரும் புள்ளி ஒருவரை ஞாபகப்படுத்துகிறார். பழம்பெரும் நடிகை சச்சு அனுபவ நடிப்பால் கவர்கிறார். வில்லன் ஜான் விஜய் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி இளவரசு, ஒய் ஜி மகேந்திரன், காளி வெங்கட், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

எம் எஸ் பிரபு ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. நாயகியின் கதாபாத்திரத்தை மாஸாக காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. திரைக்கதையில் மட்டும் ஓரளவு சுமாராக இருப்பது ஆறுதல். 

வென்சென்ஸ் – தெளிவு இல்லை!

Source link