டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் பகீர் செய்தியை வெளியிட்டு உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இரு வாரங்களை எட்டியுள்ள இந்தப் போரில், ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி,56, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தனது தந்தையைக் கொன்ற அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி காயமடைந்து கோமாவில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழான ‘தி சன்’ பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் கூறியிருப்பதாவது; தாக்குதலில் புதிய தலைவர் மொஜ்தபா ஒரு காலை இழந்துள்ளார். மேலும், அவரது வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரானின் சுகாதார அமைச்சரும், அனுபவம் வாய்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான முகமது ரேசா ஜபர்காந்தி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார், இவ்வாறு அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஈரானின் ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மொஜ்தபாவின் முதல் அறிக்கையை ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அந்த அறிக்கையை தலைவர் வாசிக்காமல், ஒரு செய்தி வாசிப்பாளர் மூலமே வாசிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு காரணமாக, இந்தத் தகவலை உறுதிபடுத்த முடியவில்லை என்றும் ‘தி சன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
