மேட்டூர்: “ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து கூடவே வைத்திருக்கிறர்கள்,” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு இன்று நடந்த பிரச்சாரத்தில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேட்டூர் வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார். நமது முதல்வர் கர்நாடகா காங்கிரஸ் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். கட்சித் தலைவராக போய்க் கேட்பது தவறில்லை, ஆனால், முதல்வர் என்ற பெயரில் போய்க் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து கூடவே வைத்திருக்கிறர்கள்.
கச்சத்தீவு, காவிரி நீர் உரிமை, முல்லை பெரியாறு உரிமை என அனைத்தையும் இழந்து நிற்கிறோம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றார். இதனால் 500 டிஎம்சி பெற வேண்டிய நாம் 150 டி.எம்சி.க்காக கையேந்தி நிற்கிறோம்.
