ஒரு டாலர் 92 ரூபாய் வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக நேற்று 92 ரூபாயை கடந்து வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன்விளைவாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, பாதுகாப்பான முதலீடாக பார்க்கபடும் டாலருக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

மேலும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து ரூபாய் மதிப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 84 டாலரை (இந்திய மதிப்பில் 7,728 ரூபாய்) எட்டியுள்ள நிலையில், நம் நாட்டின் பணவீக்கம் மற்றும் இறக்குமதி செலவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டுள்ளது.

அமெரிக்கா உடனான இடைக்கால ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த மாதம் சற்றே மீண்ட நிலையில், போர் பதற்றத்தால் அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் மீண்டும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் பதற்றம் தணியும் வரை, ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் தொடரும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Source link