ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முதல்வர் வெற்றி பெற வேண்டும்; கொளத்துாரில் உதயநிதி பிரசாரம்

சென்னை: ”கொளத்துாரில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், முதல்வர் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

சென்னை கொளத்துாரில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினை ஆதரித்து, உதயநிதி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: நியாயமாக பார்த்தால், நான் இங்கு வந்திருக்க கூடாது. ஏற்கனவே நீங்கள் ஸ்டாலினை ஜெயிக்க வைக்க வேண்டும் என, முடிவு செய்து விட்டீர்கள். தந்தைக்காக மகன் வரவில்லை என, யாரும் பேசிவிடக் கூடாது என்பதற்காக, இங்கு வந்துள்ளேன்.

இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ தொகுதி கொளத்துார்; ‘சூப்பர் ஸ்டார்’ தொகுதி. முதல்வர் ஸ்டாலினை சட்டசபைக்கு அனுப்பி வைக்க உள்ள தொகுதி இது. ஒரு தொகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக, கொளத்துார் தொகுதி உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் தலைவர் நம் முதல்வர் தான். இந்திய தலைவர்கள் பலரும் ஸ்டாலினை, ‘நம்பர் ஒன் தலைவர்’ என பாராட்டுகின்றனர். இதற்கு காரணம் இந்த கொளத்துார் தொகுதி.

இந்த தொகுதி அமைந்த பின், மூன்று முறை நம் தலைவரை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். கடந்த முறை, 70,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த தேர்தல் டில்லிக்கும் தமிழகத்திற்குமான போட்டி; இதில் தமிழகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.

டில்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும். டில்லி அணியில் மோடியும், அவரது நம்பர் ஒன் அடிமை பழனிசாமியும் உள்ளனர். 234 தொகுதியிலும் நாம் ஜெயிக்க வேண்டும். அதில் கொளத்துார் ‘நம்பர் ஒன்’ தொகுதியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர் ‘டிபாசிட்’ பறிபோக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link