ஒரே நேரத்தில் வலுக்கும் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்: அடுத்த 48 மணி நேரத்திற்கு உஷார்? டெல்டா வெதர்மேன் அப்டேட் – tamil nadu weather alert two low pressure areas intensify delta weatherman warns of rain over next 48 hours

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் வலுப்பெற்று வருவதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியா முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சூழலில், ஏற்கெனவே நேற்று மலை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேற்று இரவு முதல் நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, அடுத்த 18 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளக் கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த இரு வானிலை அமைப்புகளின் தாக்கத்தால், அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

தமிழகத்தை நோக்கி நகரும் தாழ்வுப் பகுதி

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கேரளக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வலுப்பெற்று வருவதால், அது தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்!

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே, இந்தப் பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், நீர்வீழ்ச்சிகளில் இறங்குவதையோ அல்லது அருவிகளில் குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு எப்படி இருக்கும் வானிலை?

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளார்.குறிப்பாக, மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link