நமது நிருபர்
திருச்சியை சேர்ந்த சிவா (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) ஆகிய இரண்டு பேர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே கவிஞர் ராஜாத்தி என்ற சல்மா எம்பியாக இருக்கும் நிலையில், திருச்சியின் பலம் 3 ஆக அதிகரிக்க உள்ளது.
பார்லிமென்டில் லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகள் உள்ளது. லோக்சபாவில் 545 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 250 எம்பிக்களும் உள்ளனர். லோக்சபா எம்பிக்கள் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா எம்பிக்களை ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அடிப்படையில் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த வகையில், தமிழகத்திற்கு லோக்சபாவில் 39 இடங்களும், ராஜ்யசபாவில் 18 இடங்களும் உள்ளன. தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 எம்பிக்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடக்கிறது.
இந்த சூழ்நிலையில் 6 எம்பிக்களில் 2 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். திமுகவின் திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஏற்கனவே திருச்சியை சேர்ந்த கவிஞர் ராஜாதி என்ற சல்மா ராஜ்யசபாவில் திமுக எம்பியாக பணியாற்றி வருகிறார்.
ஐந்தாவது முறையாக திருச்சி சிவா ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னையில் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் திருச்சி சிவா நிருபர்களிடம் கூறியதாவது: ராஜ்யசபாவில் பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலம் அதிகரித்து வருகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு அதிக பொறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை பாஜ கூட்டணியின் எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அவர்களின் கொள்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது, என்றார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் மனுத்தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம், ”நான் இப்போது தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கலாம், ஆனால் விரைவில் எனது பணியால் அறியப்படுவேன்” என தெரிவித்தார். கிறிஸ்டோபர் திலக் உடன் வேட்புமனு தாக்கல் செய்த வந்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
கிறிஸ்டோபர் திலக் திறமைகள் மீது நம்பிக்கை இருக்கிறது. மணிப்பூர் போன்ற இடங்களில் அவர் சவாலான பொறுப்புகளைக் கையாண்டுள்ளார். இந்தப் பொறுப்பில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்,’ என்றார்.
