ஓசூர் ஆணையர் ஷபீர் ஆலம் ஐஏஎஸ் ஆக்‌ஷன்: குணம் ஹாஸ்பிடல் டூ KFC ரூட் வரை- ஆக்கிரமிப்புகள் கிளீன் – hosur municipal corporation removed unauthorized structures near to gunam hospital

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குணம் மருத்துவமனை அருகில் சாலையோர தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் எளிதாக நடந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஓசூர் மாநகராட்சியில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் டேங்க் தெருவில் குணம் மருத்துவமனை அமைந்துள்ளது. இதற்கு எதிரே அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சாலையோர கடைகள் வரிசையாக அமைந்திருந்தன. இது நடந்து செல்வோருக்கும், அந்த வழியாக வாகனங்களை இயக்கி செல்வோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த கடைகளுக்கு வருவோர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை பார்க்க முடிந்தது.

ஓசூர் அரசு மருத்துவமனை டூ RC Church ரூட்

இந்த சூழலில் தான் போக்குவரத்து போலீசார் அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டு, பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது நடந்து செல்வோருக்கு வசதியாக அமைந்திருக்கிறது. இதேபோல் ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆர்.சி.சர்ச் செல்லும் தேன்கனிக்கோட்டை சாலையில் KFC மற்றும் பீட்சா ஹட் ஆகிய கடைகளின் விளம்பர பலகைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோர வழித்தடத்தில் அமைந்துள்ளது.

ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைப்பது எப்படி? முழு தகவல் இதோ…

தேன்கனிக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதுதொடர்பாக புகார்கள் வந்த நிலையில், மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் பொதுமக்கள் எளிதாகவும், வசதியாகவும் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. உரிய தடுப்புகள் உடன் அமைக்கப்படுவதால் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. எளிதாக நடந்து செல்லலாம் என்று கூறுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர் ஆலம் ஐஏஎஸ் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார்.

ஓசூர் தாலுகா சாலையில் கடைகளின் ஆக்கிரமிப்புகள்

உதாரணமாக ஓசூர் தாலுகா சாலையில் கடைகளின் ஆக்கிரமிப்புகள் நீட்டிக்கப்பட்டு காணப்பட்டன. இது வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தது. தினசரி பொதுமக்கள் நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை இடித்து அகற்றி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஓசூர் பகுதி மக்களிடம் கேட்கையில், நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏதுமின்றி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர் ஆலம் நடவடிக்கை

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்பது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமே தீர்வாகி விடாது. அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தலைதூக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். திடீர் ஆய்வுகள், தொடர்ச்சியான களப் பணிகள், உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்பது, புகார்கள் அளிக்க வசதிகள் செய்வதுடன், அவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் நெரிசலுக்கு தீர்வு

அடுத்தகட்டமாக பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் பகுதியில் சரக்கு வாகனங்களின் அணிவகுப்பால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த மார்க்கெட் மேற்கு தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய விற்பனைக் கூடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. காய்கறிகள் வாங்கி செல்வோரும் பல்வேறு விதமான வாகனங்கள் உடன் வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு உள் மாவட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு, கோலார், சிக்கபல்லபூர் உள்ளிட்ட கர்நாடகா மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே பத்தலப்பள்ளி மார்க்கெட் சங்கத்தினர், ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்துவதை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Source link