ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, கார் ஏற்றி கொலை செய்த சம்பவத்தில், தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட

ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, கார் ஏற்றி கொலை செய்த சம்பவத்தில், தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வசந்த் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர். இவரது மகன் ஆதித்யா, 20; தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.

இவர், தன் நண்பர்களான ஹரிஷ், 19; ரித்திக்குமார், 20, ஆகியோருடன், ‘டொயோட்டா பார்ச்சூனர்’ காரில், நேற்று முன்தினம் மாலை, ஓசூர், ராயக்கோட்டை, அன்னை அரவிந்தன் நகர் வழியாக சென்றார்.

அங்கு, ஓசூர், தொழிலாளர் நலத்துறை அலுவலக உதவி தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தி, 54, வீட்டின் முன் நிறுத்திய பைக்கை எடுக்க, ‘ஹார்ன்’ அடித்த போது, தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ஆதித்யா, சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், 35, மருமகள் அம்சவேணி, 33, பேத்தி நிலானி, 6, ஆகியோர் மீது காரால் மோதினார்.

சிவமூர்த்தி உயிரிழந்த நிலையில், கிருபாகரன், அம்சவேணி, நிலானி படுகாயமடைந்தனர்.

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிந்த ஓசூர் டவுன் போலீசார், ஆதித்யாவை நேற்று முன்தினம் இரவும், அவருடன் இருந்த ஹரீஷ், ரித்திக்குமார் ஆகியோரை நேற்றும் கைது செய்தனர்.

சிறுமி

தப்பியது

எப்படி?

சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காரை மோதி விட்டு, ஆதித்யா காரை பின்னால் எடுக்க முயன்றுள்ளார். அப்போது காரை பின்னால் எடுக்க முடியவில்லை. அப்படி பின்னால் கார் வந்திருந்தால், சிவமூர்த்தியின் பேத்தியான, 6 வயது நிலானியும் உயிரிழந்திருப்பார். இக்காட்சிகள் அந்த, ‘சிசிடிவி’ பதிவில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

‘சிசிடிவி’ காட்சிகள்

வெளியாகாதது ஏன்?

சிவமூர்த்தியை கார் ஏற்றி கொலை செய்த சம்பவம், அப்பகுதி, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளது. அ தை, போலீசார் மற்றும் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் தரப்பினர் வாங்கியதாக கூறப்படுகிறது. இக்காட்சிகள் எக்காரணம் கொண்டும், ஊடகங்களுக்கு சென்றுவிடக் கூடாது என்றும், வெளியே சென்றால், ‘சஸ்பெண்ட்’ செய்து விடுவதாகவும், மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால், போலீசார் வீடியோ காட்சிகளை வெளியிடவில்லை. குற்றவாளிகள் தரப்பை காப்பாற்ற, இக்காட்சிகளை அழிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதே போல, ஆதித்யா புகைப்படத்தை தராமல், அவருடன் இருந்த மற்ற இருவரின் புகைப்படத்தை மட்டும் போலீசார் வழங்கினர். பத்திரிகையாளர்களின் தொடர் அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி ஆதித்யா புகைப்படத்தை போலீசார் வழங்கினர்.

Source link