ஓசூர்: தமிழக எல்லையில், குட்கா கடத்திய கார் டிரைவர், வாகன சோதனை செய்ய முயன்ற போலீஸ் ஏட்டு மீது மோதினார். கார் பேனட் மீது விழுந்த நிலையில், 4 கி.மீ., துாரம், ஓட்டிச் செல்லப்பட்ட காரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று மதியம், 3:30 மணிக்கு போலீசார் வாகன சோதனை செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த ஒரு காரை சோதனைக்கு நிறுத்தினர்.
ஆனால், டிரைவர் நிறுத்தாமல், போலீஸ் ஏட்டு ராஜிவ்காந்தி, 48, மீது மோதினார். இதில், பேனட் மீது அவர் விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் நிற்காக கார் பறந்தது. 4 கி.மீ., துாரம் சென்ற நிலையில், சிப்காட் போலீசார் காரை, சினிமா பட பாணியில் விரட்டிச் சென்றனர்.
ஓசூர் தர்கா அருகே மக்கள் உதவியுடன், காரை மடக்கிய போலீசார், ஏட்டு ராஜிவ் காந்தியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போதும் டிரைவர், அங்கு நின்றிருந்த போலீசாரை இடித்து விட்டு தப்ப முயலவே போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், ஓசூர், காளேகுண்டாவை சேர்ந்த யாரப் பாஷா, 34, என்பது தெரிந்தது.
கர்நாடகாவிலிருந்து, 2.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 390 கிலோ புகையிலை பொருட்கள், 48 பாக்கெட் கர்நாடகா மதுபானத்தை கடத்தி சென்றது தெரிந்தது. காருடன் குட்கா, மதுவை பறிமுதல் செய்த போலீசார், யாரப் பாஷாவை கைது செய்தனர்.
